டெல்லியில் தேவைப்பட்டால் 2 நாட்கள் ஊரடங்கு; சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

காற்று மாசுவை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

Update: 2021-11-13 09:49 GMT
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான காற்று மாசு நிலவுகிறது. காற்று மாசு மிகவும் அபாய கட்ட அளவில் இருப்பதால், டெல்லி மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 

தலைமை நீதிபதி என். வி ரமணா தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசரணை நடைபெற்றது. அப்போது,  சுப்ரீம் கோர்ட் நீதிபதி கூறுகையில் “  டெல்லியில்  நிலவரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை பாருங்கள். வீட்டில் கூட  நாங்கள் மாஸ்க் அணிந்து கொண்டிருக்கிறோம். காற்று மாசை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை என்ன திட்டம் வகுத்துள்ளீர்கள் என கூறுங்கள். இரண்டு நாள் ஊரடங்கு?  காற்று மாசு அளவை குறைப்பதற்கான உங்களின் திட்டம் என்ன? ” என மத்திய மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பினார். 

மத்திய அரசு மற்றும் டெல்லி, பஞ்சாப், அரியானா மாநில அரசுகளிடம் இன்று மாலை  அவசர கூட்டம் நடத்தி ஆலோசிப்பதாக கோர்ட்டில்  தெரிவிக்கப்பட்டது. மேலும், டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமாக இருப்பதை ஒப்புக்கொண்ட டெல்லி அரசு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. இதையடுத்து, காற்று மாசுவை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 

மேலும் செய்திகள்