நாளை நடைபெறும் சந்திரகிரகணம்: எங்கெல்லாம் தெரியும்...?

பகுதி சந்திரகிரகணத்தின் காலம் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் 24 வினாடிகள் நிகழ்கிறது.

Update: 2021-11-18 06:26 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

சூரியன், பூமி மற்றும் சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதை சந்திர கிரகணம் என்கிறார்கள். இந்த நிகழ்வு பவுர்ணமி நாளில் தான் ஏற்படும். நிலவு மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுவதுமாக மறைத்தால் முழு சந்திரகிரகணம் என்றும், சூரிய ஒளியை பகுதியளவு மறைத்தால் பகுதி சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, 21 ஆம் நூற்றாண்டில் பூமி, மொத்தம் 228 சந்திர கிரகணங்களை சந்திக்கும். சந்திர கிரகணம் ஆண்டுக்கு அதிகபட்சம் மூன்று முறை மட்டுமே நிகழும்.

இந்த வருடத்தின் கடைசி சந்திரகிரகணமானது நாளை ஏற்படுகிறது. இது பகுதி சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. பகுதி சந்திரகிரகணத்தின் காலம் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் 24 வினாடிகள் நிகழ்கிறது. இந்த நிகழ்வு முழூவதுமாக நடைபெறுவதற்கு 6 மணி 1 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. இது கடந்த 580 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக நீண்ட நேரம் நிகழக்கூடிய ஒன்றாகும்.

இந்த பகுதி சந்திரகிரகணத்தை மேற்கு ஆப்ரிக்கா, மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பகுதிகளை உள்ளடக்கிய சில பகுதிகளில் உள்ளவர்கள் காண முடியும்.

இந்தியாவில் பிற்பகல் 2.34 மணிக்கு தொடங்கும் இந்த அரிய நிகழ்வினை, வானிலை தெளிவாக இருந்தால் இதனை அருணாச்சல பிரதேசம், அசாமின் குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கிரகணத்தின் இறுதி நிகழ்வினை காணலாம்.

மேலும் செய்திகள்