இம்ரான் கானை மூத்த சகோதரர் என்பதா? சித்து மீது பாஜக பாய்ச்சல்

பஞ்சாப் காங்கிரஸ் தலைவரான சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மூத்த சகோதரர் எனக் கூறும் வீடியோ ஒன்று வெளியாகி பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-11-20 11:49 GMT
புதுடெல்லி,

பஞ்சாப் காங்கிரஸ் தலைவரான சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மூத்த சகோதரர் எனக் கூறும் வீடியோ ஒன்று வெளியாகி  பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்தார்பூர் சென்ற  சித்து, தன்னை வரவேற்ற பாகிஸ்தான் அதிகாரிகளிடம்  இம்ரான் கான் தனக்கு மிகவும் பிடித்தமான நபர் எனவும் தனது மூத்த சகோதரர் போன்றவர் எனவும்  கூறும் பதிவுகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவை பகிர்ந்த பாஜக தகவல் தொழில் நுட்ப குழு தலைவர் அமித் மால்வியா, ராகுல் காந்திக்கு பிடித்தமான நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மூத்த சகோதரர் என்கிறார். கடந்த முறை பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வாவை கட்டிப்பிடித்து அவருக்கு புகழாரம் சூட்டினார். அமரிந்தர் சிங்கிற்கு பதிலாக பாகிஸ்தானை மிகவும் விரும்பும் சித்துவை காந்தி குடும்பத்தினர் தேர்வு செய்தது  வியப்பை அளிக்கிறதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா இவ்விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;- இது இந்தியாவைப் பொறுத்த வரையில் மிகவும் கவலைக்குரிய விஷயம்.  இந்துத்துவாவில் போகோஹரம் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களை பார்க்கும் அதேவேளையில், கானில் (இம்ரான் கான்) மூத்த சகோதரரை எதிர்க்கட்சி கண்டுபிடிக்கிறது. 

பாகிஸ்தானை புகழ்ந்தால் இந்தியாவில் உள்ள ஒரு சாரர் மகிழ்ச்சி அடைவார்கள் என இன்னும் நம்பும் காங்கிரஸ், இதன் காரணமாக திருப்தி படுத்தும் அரசியலில் ஈடுபடுகிறது.  எனினும், காங்கிரஸ் நினைப்பது போல மக்கள் இந்தியாவில் இல்லை” என்றார். 

மேலும் செய்திகள்