மும்பை தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து இருக்க வேண்டும்; மனிஷ் திவாரி விமர்சனம்

மும்பை தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து இருக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரி, புத்தகம் ஒன்றில் எழுதியுள்ளார்.

Update: 2021-11-23 11:07 GMT
மும்பை,

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. கடல்வழியாக மும்பைக்குள் புகுந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம், தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர். மேலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் மட்டும் போலீசாரால் உயிரோடு பிடிக்கப்பட்டான். பின்னர் அவன் தூக்கிலிடப்பட்டான்.

மனிஷ் திவாரி விமர்சனம்

மும்பை தாக்குதல் விவகாரத்தில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்பாடு குறித்து விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரி தான் எழுதிய புத்தகம் ஒன்றில் எழுதியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. '' Flash Points;20 Years- National Security Situations that impacted India'' என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். 

மனிஷ் திவாரி எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-

அப்பாவி மக்களை கொன்று குவிப்பதில் எந்த கருணையும் காட்டாத  ஒரு நாட்டிடம் , கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது பலத்தின் அடையாளம் அல்ல. அது பலவீனமாகவே கருதப்படும். வார்த்தைகளை விட செயலுக்கான நேரமும் வரும். மும்பை தாக்குதல் நடந்த நவம்பர் 26-ம் தேதிக்கு பிறகு,  செயல்களில் இறங்கியிருக்க வேண்டியதற்கான நேரமாக இருந்தது. எனவே,  இந்த தாக்குதலுக்கு பின்னர் உடனடியாக பதிலடி கொடுத்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து” இவ்வாறு மனிஷ்  திவாரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்