கொரோனா பாதிப்பு, தடுப்பூசிகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!

கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்

Update: 2021-11-27 04:03 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,  

இந்தியாவில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு ஏறுமுகம் காணத்தொடங்கி உள்ளது. கடந்த 24-ந் தேதி 9,283 பேருக்கும், 25-ந் தேதி (நேற்று முன்தினம்) 9,119 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இது நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் 15.7 சதவீதம் கூடுதல் ஆகும். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 55 ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துவந்த நிலை நேற்று மாறி விட்டது. இதன் காரணமாக கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 133 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே புதிய கொரோனாவான ‘ஒமிக்ரான்’ பரவியுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் மற்றும் இந்த நாடுகளின் வழியாக வருபவர்களையும் தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு உஷார்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புகளின் தற்போதைய நிலைமை மற்றும் தடுப்பூசிகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்