மனிப்பூர்: உலகின் மிக உயரமான ரயில்வே மேம்பாலத்தின் பணிகள் தீவிரம்

உலகின் மிக உயரமான ரயில்வே மேம்பாலம் என்ற பெருமையை அடைய உள்ளது.

Update: 2021-11-28 16:28 GMT
இம்பால்,

வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம், மேகாலயா, சிக்கிம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் ரயில் போக்குவரத்து போதுமான அளவில் இல்லை.

இந்த மாநிலங்களின் தலைநகரங்களை ரயில் போக்குவரத்து வாயிலாக இணைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக மணிப்பூர் மாநில தலைநகர்-இம்பால் மற்றும் ஜிராபம் நகரங்களுக்கு இடையே புதிய ரயில் பாதை அமைக்கப்படுகிறது. 

இதற்காக, நோனி பள்ளத்தாக்கின் குறுக்கே 141 மீட்டர் உயரத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இது பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், உலகின் மிக உயரமான ரயில்வே மேம்பாலம் என்ற பெருமையையும் அடைய உள்ளது. தற்போது, தென் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பால்கன்ஸ் என்ற நாட்டில் 139 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ரயில்வே பாலம் தான், உலக அளவில் மிக உயரமான ரயில்வேபாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

மணிப்பூர் பாலம் உபயோகத்துக்கு வந்தவுடன் இது பால்கன்ஸ் நாட்டிலுள்ள ரயில்வே பாலலத்தின் சாதனையை முறியடிக்கும். 

இந்த திட்டத்தின் தலைமை பொறியாளர் சந்தீப் ஷர்மா கூறியதாவது, ஜிராபம் மற்றும் இம்பால் ஆகிய நகரங்களுக்கு இடையேயான 220 கி.மீ. துாரத்தை கடக்க இப்போது 10 முதல் 12 மணி நேரம் வரை ஆகிறது. இது பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில்,  இரு நகரங்களுக்கு இடையேயான துாரம் 111 கி.மீ-ஆக குறையும். மேலும் இரு நகரங்களுக்கு இடையேயான தூரத்தை இரண்டு அல்லது இரண்டரை மணி நேரத்தில் கடந்து விடலாம். இந்த பாலம் தற்போது நான்கு கட்டங்களாக கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின் கடைசி கட்டம் டிசம்பர் 2023-ல் நிறைவடையும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்