திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆபரண காப்பாளர் டாலர் சேஷாத்ரி காலமானார் - ஜெகன்மோகன் ரெட்டி இரங்கல்

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆபரண காப்பாளராக இருந்த டாலர் சேஷாத்ரி மாரடைப்பால் உயிாிழந்தார்.

Update: 2021-11-29 09:46 GMT
திருமலை,

திருப்பதியை சேர்ந்தவர் டாலர் சேஷாத்ரி எனப்படும் சேஷாத்திரி. கடந்த 1977ஆம் ஆண்டு திருப்பதி கோவிலில் ஊழியராக பணியில் சேர்ந்த டாலர் சேஷாத்ரி ஏழுமலையானின் திருவாபரணங்களை நிர்வகிக்கும் பொக்கிஷதாரர் (ஆபரணகாப்பாளர்) பணி வழங்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள ஏழுமலையானின் திருவாபரணங்களை நிர்வகிக்கும் இந்த பணியை ஏற்றுக்கொள்ள தேவஸ்தான ஊழியர்கள் பெரும்பாலும் விரும்புவது கிடையாது. காரணம் ஏழுமலையானின் திருவாபரணங்களில் பதிக்கப்பட்டிருக்கும் ஒரே ஒரு சிறிய நவரத்தின கல் காணாமல் போனால் கூட பதில் சொல்ல வேண்டியது ஆவண காப்பாளரின் கடமை.

இந்தநிலையில் பல ஆண்டுகள் அதையே பணியைத் திறம்பட செய்து வந்தவர் டாலர் ஷோத்ரி. தனது பணிகாலம் முடிந்ததால் கடந்த 2007ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். பல்வேறு காரணங்களால் அவருடைய சேவை ஏழுமலையான் கோவிலுக்கு தேவைப்பட்டது.

எனவே சிறப்பு பணிகளுக்கான அதிகாரி (ஆபீசர் ஆன் ஸ்பெஷல் டியூட்டீஸ்) என்ற பணியை ஏற்படுத்தி 2007ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் ஏழுமலையான் கோவிலில் பணியாற்றி வந்தார்.

திருப்பதி மலைக்கு வரும் அனைத்து முக்கிய பிரமுகர்களுக்கும் இவர் அறிமுகமானவர். விஐபிக்கள் திருப்பதி மலைக்கு வந்திருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இவரை காணலாம். அதேபோல திருப்பதி பிரமோற்சவம் நடைபெறும் காலங்களில் இவர் சாமியுடன் உடன் இருப்பார். 

வாரிசுகள் யாரும் இல்லாத சேஷாத்திரி என்னுடைய இறுதி நாள் வரை நான் இறை சேவையில் இருக்க வேண்டும். அதை மட்டுமே நான் ஏழுமலையான் வேண்டிக்கொள்கிறேன் என்று அடிக்கடி கூறுவாராம்.

அவருடைய விருப்பத்திற்கு அவருடைய ஏற்ப 2007 ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றிருந்தாலும் அவருக்கு இறுதிவரை ஏழுமலையான் கோவிலில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது என்றால் ஏழுமலையானின் அருட்கிருகம் எனலாம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் விசாகப்பட்டினத்தில் இன்று நடத்தும் கார்த்திகை தீப உற்சவ நிகழ்ச்சியை நிர்வகிப்பதற்காக அங்கு சென்று இருந்தபோது இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். 

இதற்கு முன்னர் வரை மூன்று முறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட நான்காவது மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது மறைவிற்கு ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். 1978-ம் ஆண்டு முதல் டிடிவி உடன் இருந்த சேஷாத்ரியை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்