"ஒமைக்ரான் யாரையும் விட்டு வைக்காது" பயத்தில் மனைவி, குழந்தைகளை கொலை செய்த பேராசிரியர்

ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மீதான பயம் காரணமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளை கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-12-04 10:50 GMT
கான்பூர்,

தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் மாறுபாடு இந்தியா உட்பட பல நாடுகளில் பரவியுள்ளது. கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் மாறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண் பூரில்  உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில், தடயவியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் சுஷில் சிங் (வயது 55) . இவரது மனைவி சந்திரபிரபா(வயது 50) மகன் ஷிகார் சிங் (வயது 21) மகள் குஷி சிங் (வயது 16)

சுஷில் சிங் தனது மனைவி, குழந்தைகளை கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கொலை செய்து தப்பியோடுவதற்கு முன்பு, இதுகுறித்து தனது சகோதரருக்கு அந்த பேராசிரியர் வாட்ஸ் அப்-ல் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் 'ஒமைக்ரான் மாறுபாட்டில் இருந்து யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள்'. எனவே அனைவரையும் விடுவிக்கிறேன்' என்று தெரிவித்திருந்தார். அந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சியடைந்த சகோதரர், உடனே அவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். பூட்டி இருந்த வீட்டை உடைத்து திறந்து பார்த்த போது தனது சகோதரரின் மனைவி மற்றும் குழந்தைகள் சடலமாக கிடந்ததை பார்த்துள்ளார்.

மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த பேராசிரியரின் டைரியையும் கைப்பற்றினர். அதில், தனது குடும்பத்தினரை கொலை செய்தது குறித்தும், ஒமைக்ரான் மாறுபாட்டைப் பற்றியும் அவர் எழுதியுள்ளார்.

'இப்போது, ​​​​இறந்த உடல்களை எண்ணுவது தேவையில்லை' என்றும், ​​​​கொரோனா வைரஸ் அனைவரையும் கொல்லும்' என்றும் அவர் எழுதி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்