உ.பி.யில் திருடு போன போர் விமானத்தின் டயர்; போலீசார் பறிமுதல்

உத்தர பிரதேசத்தில் டிரக் ஒன்றில் இருந்து திருடப்பட்ட இந்திய விமான படையின் மிரேஜ் போர் விமானத்தின் டயர் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-12-05 12:45 GMT


லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் பக்‌ஷிகாதலாப் பகுதியில் இந்திய விமான படையின் படைத்தளம் அமைந்துள்ளது. இந்த படைத்தளத்தில் இருந்து கடந்த 27-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோதாப்பூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு டிரக் ஒன்றின் மூலம் ராணுவ உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், லக்னோவில் உள்ள ஐஸ்யானா நகர் பகுதியில் அந்த டிரக் சென்று கொண்டிருந்தபோது அதில் ஏறிய மர்மநபர்கள் விமானப்படைத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மீரஜ் ரக போர் விமானத்தின் டயர்களை திருடி சென்றுள்ளனர்.

இது தொடர்பாக ஐஸ்யானா நகர போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விமானப்படை தளத்திற்கு ராணுவ உபகரணங்களை கொண்டு சென்ற டிரக்கில் இருந்து மீரஜ் ரக போர் விமானத்தின் டயர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அந்த டயரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  இதுபற்றி போலீசார் கூறும்போது, 2 பேர் டயருடன் வந்தபோது பிடிபட்டனர்.  அவர்களிடம் விசாரித்ததில், சாலையில் டயர் கிடந்தது.  அது டிரக் டயராக இருக்கும் என நினைத்து அதனை எடுத்து சென்றோம் என கூறினர்.  இதன்பின் டயரை கைப்பற்றி ஆய்வு செய்தோம்.

இதில், அந்த டயர் போர் விமானத்தின் டயர் என்பதும், சப்ளை செய்த டெப்போவில் இருந்து சென்ற டயர் என்பதும் உறுதியானது என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்