உத்தரகாண்ட்: தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமைச்சரவையில் இருந்து பாஜக மந்திரி நீக்கம்

உத்தரகாண்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமைச்சரவையில் இருந்து பாஜக மந்திர் நீக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-01-17 04:37 GMT
டேராடூன்,

70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு அடுத்த மாதம் 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.

இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்பதால் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் களமிறங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில், உத்தரகாண்டில் புஷ்கர் சிங் தமி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. புஷ்கர் தலையிலான அமைச்சரவையில் மந்திரி ஹரக் சிங் ராவத் இடம்பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹரக் சிங் 2016-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், உத்தரகாண்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஹரக் சிங் ராவத் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பாஜக வட்டாரத்தில் தகவல்கள் பரவின. இதனையடுத்து, ஹரக் சிங் ராவத்தை அமைச்சரவையில் இருந்து நீக்கி முதல்- மந்திரி புஷ்கர் சிங் தமி நேற்று உத்தரவிட்டுள்ளார். ஹரக் சிங் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டத்தை முதல்-மந்திரி கவர்னருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஹரக் சிங் ராவத்தை பாஜக கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது.

பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. ஹரக் சிங் ராவத் இன்று காங்கிரசில் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவில் இருந்து ஹரக் சிங் ராவத் நீக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் செய்திகள்