மிரட்டும் கொரோனா; இந்தியாவில் 4 கோடியை கடந்த பாதிப்பு!!

அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை உள்ளது.

Update: 2022-01-26 06:40 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் இதுவரை 4 கோடியே 85 ஆயிரத்து 116 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

முன்னதாக நேற்று வரை நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 97 லட்சத்து 99 ஆயிரத்து 202 ஆக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 4 கோடியை கடந்தது.

இதுவரை 4 லட்சத்து 91 ஆயிரத்து 127 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். அதில் 70 சதவீதம் இறப்புகள் இணை நோய்களால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு  ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக 1 லட்சத்து 42 ஆயிரத்து 237 இறப்புகள் மராட்டிய மாநிலத்தில் பதிவாகி உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, கேரளாவில் 52 ஆயிரத்து 141 இறப்புகள் பதிவாகி உள்ளன.

கொரோனாவிலிருந்து மீண்டு வரும் விகிதம் 93.23 சதவீதமாக குறைந்துள்ளது.நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 73 லட்சத்து 70 ஆயிரத்து 971 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.23 சதவீதமாக உள்ளது. 

தினசரி கொரோனா பரவல் விகிதம் 16.16 சதவீதமாக பதிவாகி உள்ளது. வாராந்திர கொரோனா பரவல் விகிதம் 17.33 சதவீதமாக பதிவாகி வருகிறது.

இந்தியாவில் 2020ம் ஆண்டு டிசம்பர் 19 அன்று, கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 2 கோடியையும், தொடர்ந்து ஜூன் மாதம் 23ந்தேதி 3 கோடியையும் தாண்டி பதிவானது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,89,26,712 ஆக உயர்ந்துள்ளது. 

அமெரிக்காவில் மொத்தம் 7.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 8,94,655 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை உள்ளது. 

மேலும் செய்திகள்