டாடா வசம் சென்ற பிறகு ஏர் இந்தியா எப்படி உள்ளது? வாடிக்கையாளர்களின் பயண அனுபவம்..!

டாடா குழுமம் இந்திய அரசிடம் இருந்து விமான சேவையை கையகப்படுத்திய பிறகு ஏர் இந்தியா நேற்று புதிய பயணத்தை தொடங்கியது.

Update: 2022-01-29 06:36 GMT
கோப்புப்படம்

புதுடெல்லி,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. எனினும் கடன் சிக்கலால் அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. மேலும் கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஏற்பட்ட விமான சேவை பாதிப்பில் ஏர் இந்தியா நிறுவனத்தின் வருவாய் மேலும் சிக்கலுக்குள்ளானது.

இதற்கிடையில், ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு தீவிரப்படுத்தியது. இதற்கிடையில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை டாடா குழுமத்தின் டாலசி பிரைவெட் லிமிட்டெட் என்ற நிறுவனம் வாங்கியது.  இதன் மூலம் நேற்று ஏர் இந்தியா நிறுவனம் முழுவதும் டாடா குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

டாடா குழுமம் இந்திய அரசிடம் இருந்து விமான சேவையை கையகப்படுத்திய பிறகு ஏர் இந்தியா நேற்று புதிய பயணத்தைத் தொடங்கியது. புதிய நிர்வாகம் விமானங்களை சரியான நேரத்தில் இயக்க திட்டமிட்டுள்ளனர்.

இது தவிர விமானிகளின் சிறப்பு அறிவிப்பும் தரையிறங்குவதற்கு முன் இடம்பெற்றது. இந்த அறிவிப்பு, செயல்பாட்டுத் துறையின் அதிகாரப்பூர்வ உத்தரவின் ஒரு பகுதியாகும்.

அதன் படி “அன்புள்ள விருந்தினர்களே, இது உங்கள் கேப்டன். ஒரு சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் இந்த வரலாற்று விமானத்திற்கு வரவேற்கிறோம். ஏழுபது ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்தின் ஒரு அங்கமாகிறது. ஒவ்வொரு ஏர் இந்தியா விமானமும் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்துடன் உங்களுக்கு சேவை செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்” என அறிவிக்கபட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தின் ஒரு பகுதியாக பயணிகளை ‘விருந்தினர்’ என்று அழைக்கின்றனர். பல உள்நாட்டு விமான நிறுவனங்களைப் போல் இல்லாமல், ஏர் இந்தியா அனைத்து பயணிகளுக்கும் சைவ உணவை (சாண்ட்விச் மற்றும் ஜூஸ்) வழங்கியது.

நேற்றைய (மும்பை-நெவார்க்) விமானம் மற்றும் ஐந்து (மும்பை-டெல்லி) விமானங்களில் அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக  பல விமானங்களுக்கு விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது. நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு எகானமி வகுப்பில் அசைவ உணவுகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. சிறந்த கேபின் குழு உறுப்பினர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப் போவதாக டாடா குழு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்