எரிபொருள் விலை உயர்வு; தெருவில் சமையல் செய்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்

சமையல் கியாஸ் மற்றும் எரிபொருள் விலை உயர்வை முன்னிட்டு மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-29 09:02 GMT


புதுடெல்லி,


இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஒரே விலையில் நீடித்து வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. 137 நாட்களுக்கு பின் கடந்த 22ந்தேதி முதல் பெட்ரோல், டீசலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலை போன்றே சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எரிவாயு விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் சமையல் கியாஸ் மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றை முன்னிட்டு, டெல்லியில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திற்கு வெளியே இளைஞர் காங்கிரசார் இன்று நண்பகல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களில் மகளிர் காங்கிரசார், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியின் உருவப்படங்களை வைத்து கோஷங்களை எழுப்பியபடியும், தெருவில் அமர்ந்தபடி சப்பாத்தி போடுவது, ரொட்டி சுடுவது உள்ளிட்டவற்றிலும் ஈடுபட்டனர்.  மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து கோஷங்களை எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடத்தியதில் அந்த பகுதியில் வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.  இதுபற்றிய தகவல் அறிந்து வந்த போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.  இதனால், வன்முறை எதுவும் பரவி விட கூடாது என்ற நோக்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகும்படி போலீசார் வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்