புனேயில் அரசு ஊழியர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் - மாவட்ட நிர்வாகம் உத்தரவு

புனேயில் அரசு ஊழியர்களுக்கு ஹெல்மெட்டை கட்டாயமாக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-04-01 23:53 GMT
புனே,

புனே மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தேஷ்முக் நேற்று முன்தினம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில் அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சிகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மராட்டிய போக்குவரத்து கமிஷனரின் வழிகாட்டுதலின் படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், உத்தரவை மீறி ஹெல்மெட் அணியாத அரசு ஊழியர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் இந்த உத்தரவு குறித்து கலெக்டர் ராஜேஷ் தேஷ்முக் கூறுகையில், “ஹெல்மெட் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணிவதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அலுவலகம், பாதுகாப்பு முகமைகள் ஏற்கனவே அவர்களின் ஊழியர்களுக்கு ஹெல்மெட்டை கட்டாயமாக்கி உள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்