பேக்கரியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் 16 வயது மாணவி உயிரிழப்பு! 14 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை

உணவகத்தில் வழங்கப்பட்ட கெட்டுப்போன ஷவர்மாவை சாப்பிட்டதால் அவர்களுக்கு கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது.

Update: 2022-05-01 16:32 GMT
காசர்கோடு,

கேரளாவின் காசர்கோடு அருகே செருவத்தூரில் உள்ள பேக்கரியில் ‘ஷவர்மா’ வாங்கி சாப்பிட்டதால் 16 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, அந்த சிறுமியும் அவரை போல மற்றவர்களும் உணவகத்தில் வழங்கப்பட்ட  கெட்டுப்போன ஷவர்மாவை சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். ஷவர்மா சாப்பிட்டதும் அவர்களுக்கு கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட 14 மாணவர்களும் கண்ணங்காடு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் 14 பேரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாணவியை மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனில்லை. அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதனால் மாணவியின் குடும்பத்தினர், நண்பர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் என அனைவரும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, செருவத்தூரில் உள்ள ‘ஐடியல் கூல் பாரில்’ ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு கடுமையான உணவு விஷம் ஏற்பட்டது. சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள் ஆவர்.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்த கூல் பாரில் இருந்து ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்றிரவும் இன்று காலையும் சில குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உணவு பாதுகாப்பு ஆணையருக்கு சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் இன்று உத்தரவிட்டார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அந்த கடை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்தியதில், உணவகத்தில் உள்ள ஷவர்மா சாப்பிட்டதால் தான் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை உறுதி செய்தனர். தொடர்ந்து அந்த பேக்கரி மூடப்பட்டது. விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்