ஜம்மு-காஷ்மீர்: போராட்டம் நடத்திய காஷ்மீர் பண்டிட் ஊழியர்கள் மீது போலீசார் தடியடி; விசாரணைக்கு கவர்னர் உத்தரவு!

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிட் ராகுல் பட் கொலையை கண்டித்து போராட்டம் நடத்திய காஷ்மீர் பண்டிட் ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

Update: 2022-05-15 11:12 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் புத்காம் மாவட்டத்தில், அரசு ஊழியராக பணியாற்றி வந்த ராகுல் பட் என்ற காஷ்மீர் பண்டிட்,  காஷ்மீரில் உள்ள தெஹ்சில் அலுவலகத்தில்  பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.

ராகுல் பட் கொலையை கண்டித்து ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. காஷ்மீர் பண்டிட் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாமல் நிர்வாகத்தின் தோல்வி இது என கண்டனம் தெரிவித்தும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த போராட்டத்தை அடக்க போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.

இந்த நிலையில், ராகுல் பட் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய காஷ்மீர் பண்டிட் ஊழியர்கள் மீது படைப் பிரயோகம் செய்தது குறித்து விசாரணை நடத்த ஜம்மு-காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.

“அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டிய தருணம் இதுவாகும், அதனால் அமைதியான சூழல் நிலவும். சிலர் காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க முயன்றனர், ஆனால் அவர்களின் முயற்சி வெற்றிபெறாது என்பதை நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.சம்பவத்தில் ஈடுபட்ட இரு வெளிநாட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மற்றவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

படை பலத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நிர்வாகத்திற்கு  உத்தரவிட்டுள்ளேன். காஷ்மீர் பண்டிட் ஊழியர்களிடம் சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும்.  அவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.  அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க அனைத்து முயற்சிகளையும் நிர்வாகம் எடுக்கும்.”

இவ்வாறு துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்