3 நாள் பட்டினி, கண்ணை கட்டி, கொடூர சித்ரவதை... பெற்ற மகளை கொன்ற தொழிலதிபரால் பரபரப்பு

குஜராத்தில் பெற்ற மகளை 3 நாள் பட்டினி போட்டு, கண்ணை கட்டி, பேச விடாமல் கொடூர சித்ரவதை செய்து கொன்ற தந்தை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-10-15 14:53 GMT



தலாலா,



குஜராத்தின் சூரத் நகரில் தலாலா பகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பவேஷ்பாய் அகாபரி. இவரது மனைவி கபிலாபென். இந்த தம்பதியின் ஒரே மகள் தைரியா அகாபரி (வயது 14). பவேஷ்பாய் தொழிலதிபராக இருந்து வந்துள்ளார். அலுமினியம் உலோக பொருட்கள் தொழிலில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு தவா கிர் என்ற பகுதியில் நிலமும் உள்ளது.

இந்த நிலையில், 8-ம் வகுப்புக்கு பின்பு, சூரத் நகரில் இருந்து தவா கிராமத்தில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்புக்கு தைரியா அகாபரி சேர்க்கப்பட்டு உள்ளார். தைரியா நன்றாக படித்து வந்துள்ளார். பவேஷ்பாயின் மூத்த சகோதரர் திலீப் அகாபரி.

இந்நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து, தைரியா அகாபரியை கொடூர கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது. தைரியா திடீரென உயிரிழந்து விட்டார் என சிறுமியின் மாமாவுக்கு தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு திலீப் அகாபரி தெரிவித்து உள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கம்லேஷ் மற்றும் அவரது தந்தையான வல்ஜிபாய் மற்றும் அவரது மனைவி லாபுபென் ஆகியோர் உடனடியாக தவா கிராமத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். சூரத் நகரில் இருந்த தைரியாவின் தாய் கபிலாவும் உடனடியாக புறப்பட்டு உள்ளார்.

அவர்கள் வருவதற்குள் தைரியாவின் உடலை பவேஷ் மற்றும் அவரது சகோதரர் திலீப் எரித்து விட்டனர். கூட கூட்டாளிகளும் இருந்துள்ளனர். இதுபற்றி கேட்டதற்கு தொற்று நோய் ஏற்பட்டு, தைரியாவின் உடலெல்லாம் சொறி வியாதி ஏற்பட்டு விட்டது. இந்த வியாதி மற்றவர்களுக்கு தொற்றி விடாமல் இருக்க உடனடியாக எரிக்கப்பட்டு விட்டது என பதிலளித்து உள்ளனர்.

ஆனால் கிராமவாசிகள், தைரியாவுக்கு தொற்று வியாதி எதுவும் இல்லை என்றும் தைரியாவின் தந்தை மற்றும் மாமா சேர்ந்து மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர் என கூறியுள்ளனர்.

இதுபற்றி போலீசில் அளித்த புகாரின் பேரில் பவேஷ்பாய், திலீப், கோபால்பாய் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், தனது மகளுக்கு பேய் பிடித்து இருக்க கூடும் என்ற சந்தேகத்தில் மந்திர, தந்திர மற்றும் பூஜைகளை பவேஷ்பாய் செய்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, சக்லிதர் பகுதியில் வயல்வெளிக்கு அழைத்து சென்ற பவேஷ்பாய் உள்ளிட்டோர், தைரியாவுக்கு அவரது பழைய ஆடைகளை உடுத்தி விட்டுள்ளனர்.

அதன்பின், தைரியாவின் பழைய ஆடைகள் மற்றும் பிற பொருட்களை பெரிய கல் ஒன்றின் மீது வைத்து, தீ வைத்து எரித்து உள்ளனர். அதற்கு அருகே 2 மணிநேரம் வரை தைரியாவை தொடர்ச்சியாக நிற்க வைத்து உள்ளனர்.

இதில், உடல் முழுவதும் தைரியாவுக்கு தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து தைரியா அழுது கொண்டே இருந்துள்ளார். திலீப், தைரியாவை பிடித்து வைத்து, மிரட்டியுள்ளார். அன்றிரவு அவர்கள் யாகம் ஒன்றை நடத்தி உள்ளனர்.

தொடர்ந்து அடுத்த நாள் காலையில் தைரியாவை 2 பேரும் சேர்ந்து கம்புகள் மற்றும் வயர்களால் அடித்து, துன்புறுத்தி உள்ளனர். பின்னர் கரும்பு தோட்டத்திற்கு இழுத்து சென்றுள்ளனர். தலைமுடியை முடிச்சு போட்டு, இரண்டு நாற்காலிகளுக்கு நடுவில் அமர வைத்தனர்.

3 நாட்களாக சாப்பிட எதுவும் தராமல் பட்டினி போட்டு உள்ளனர். அவ்வப்போது, அந்த பகுதிக்கு பவேஷ்பாய் உள்ளிட்ட 2 பேரும் வந்து போய் உள்ளனர். சிறுமியின் கண்களை கட்டி போட்டுள்ளனர். எதுவும் பேச கூட முடியாமல் செய்து உள்ளனர்.

இதன்பின், சம்பவத்தன்று தொலைவில் இருந்து பார்த்து விட்டு, சிறுமி உயிருடன் இருக்கிறார் என தெரிந்ததும் திரும்பி சென்றுள்ளனர். இதற்கு அடுத்து 2 நாட்களுக்கு பின் அவர்கள் திரும்பி வந்தபோது, சிறுமி உயிரிழந்து கிடந்துள்ளார். அவரது காயங்களில் சிறு சிறு பூச்சிகள் இருந்துள்ளன. உடல் அழுகியிருந்தது.

இதன்பின் தைரியாவின் உடலை பிளாஸ்டிக் பையில் போட்டு, போர்வை மற்றும் கம்பளியில் சுற்றி எடுத்து சென்றுள்ளனர். இதன்பின்பு, உடலை உடனடியாக எரித்து விட முடிவு செய்துள்ளனர். இதன்படி, காரில் வைத்து அதிகாலை 3 மணியளவில் தீ வைத்து எரித்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில் பவேஷ்பாய் உள்ளிட்ட குற்றவாளிகளின் சார்பில் ஆஜராக கூடாது என தலாலா பகுதி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. பெற்ற மகளை பேய் பிடித்துள்ளது என்ற பெயரில் சித்ரவதை செய்து, கொடூர முறையில் தொழிலதிபர் கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்