'ஆன்லைன்' பண மோசடியால் 39 சதவீத குடும்பங்கள் பாதிப்பு அதிர வைக்கும் ஆய்வுத்தகவல்

ஆன்லைனில் பண மோசடி என்பது இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக நடைபெறத்தொடங்கி உள்ளது.

Update: 2023-05-03 00:15 GMT

புதுடெல்லி, 

ஆன்லைனில் பண மோசடி என்பது இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக நடைபெறத்தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான 'லோக்கல் சர்க்கிள்ஸ் ' ஒரு ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் நாடு முழுவதும் உள்ள 331 மாவட்டங்களைச் சேர்ந்த 32 ஆயிரம் குடும்பத்தினர் பங்கேற்று பதில் அளித்துள்ளனர். இவர்களில் 66 சதவீதத்தின் ஆண்கள், 34 சதவீதத்தினர் பெண்கள்.

இந்த ஆய்வின் முடிவுகளை லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது வருமாறு:-

* கடந்த 3 ஆண்டுகளில் 39 சதவீதத்தினர் ஆன்லைன் பண மோசடி செய்யப்பட்டு, பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்களில் 24 சதவீதத்தினருக்கு இழந்த பணம் திரும்பக் கிடைத்துள்ளது. ஆனால் புகார் செய்தவர்களில் 70 சதவீதத்தினர் தங்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

* ஆய்வில் பங்கேற்று பதில் அளித்தவர்களில் 23 சதவீதத்தினர் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மோசடி அனுபவம் தங்களுக்கு வாய்த்ததாக தெரிவித்துள்ளனர்.

* ஆன்லைனில் விளம்பரங்களைப் பார்த்து, குறிப்பிட்ட இணையதளத்தில் பணத்தைச் செலுத்தி விட்டு, பொருள் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தும், பொருட்கள் வினியோகம் செய்யப்படாமல் ஏமாற்றப்பட்டதாக 13 சதவீதத்தினர் வேதனை தெரிவித்து உள்ளனர்.

* 10 சதவீதத்தினர் ஏ.டிஎம்.கார்டு மோசடிக்கு ஆளாகி உள்ளனர். 10 சதவீதத்தினர் வங்கிக்கணக்கு மோசடி, 16 சதவீதத்தினர் பிறவகையான மோசடி பற்றி தெரிவித்துள்ளனர்.

* ஆய்வில் பங்கேற்றவர்களில் 30 சதவீதத்தினரில் குடும்பத்தில் ஒருவர் ஆன்லைன் பண மோசடி பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 9 சதவீதத்தினர் தங்கள் குடும்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

* 57 சதவீதத்தினர் தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் இந்த ஆன்லைன் பண மோசடியில் தப்பி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

* ஆன்லைன் பண மோசடி செய்யப்பட்டவர்களில் 18 சதவீதத்தினர் முறைப்படி உரிய இடத்தில்- நிறுவனத்தில் புகார் செய்துள்ளனர். அவர்களுக்கு பணம் திரும்பக் கிடைத்துள்ளது. 6 சதவீதத்தினர் அதிகாரிகளிடம் புகார் செய்து, பணம் திரும்பக்கிடைத்ததாக தெரிவித்துள்ளனர். 41 சதவீதத்தினரின் புகார் மீது இன்னும் தீர்வு கிடைக்காமல் பிரச்சினை நிலுவையில் உள்ளது. 12 சதவீதத்தினர் புகார் கொடுக்க வேண்டாம் என தாங்கள் முடிவு செய்துள்ளதாக கூறி உள்ளனர்.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்