கணவர் மீதான ஆத்திரத்தில் 3 வயது குழந்தையை கொன்று உடலுடன் சுற்றித்திரிந்த தாய்

கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பெண் தனது 3 வயது குழந்தையை கொன்று உடலுடன் 4 கி.மீ. தூரம் சுற்றித்திரிந்த சம்பவம் மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-05-23 04:31 GMT

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூர் ஹிங்னா சாலையில் உள்ள எம்.ஐ.டி.சி. தொழிற்பேட்டையில் உள்ள ஒரு காகித தயாரிப்பு நிறுவனத்தில் ராம லட்சுமண் ராவத் (வயது24) மற்றும் அவரது மனைவி டுவிங்கிள் (23) ஆகியோர் வேலை செய்து வந்தனர். அவர்கள் அந்த நிறுவன வளாகத்தில் உள்ள அறையில் தங்களது 3 வயது மகளுடன் வசித்து வந்தனர். கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மாலை கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையால் திட்டிக்கொண்டனர். தாய், தந்தை சண்டையிடுவதை கண்ட அவர்களது 3 வயது மகள் அழத்தொடங்கினாள்.

டுவிங்கிள் தனது கணவர் மீதான ஆத்திரத்தில் மகளை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அப்பெண் திடீரென குழந்தையை அருகே இருந்த மரத்தின் அடியில் தூக்கி வீசி கொலை செய்தார். பின்னர் குழந்தையின் உடலுடன் கிட்டத்தட்ட 4 கி.மீ. தூரம் சாலையில் திரிந்தார். இரவு 8 மணியளவில், அந்த பகுதியில் போலீஸ் ரோந்து செல்லும் வாகனத்தை பார்த்த அவர், நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தார்.

போலீசார் அந்தப்பெண்ணிடம் இருந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எம்.ஐ.டி.சி. போலீசார் அந்தப்பெண் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை நாளை வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

கணவர் மீதான ஆத்திரத்தில் பெற்ற குழந்தையை கொன்று உடலுடன் 4 கி.மீ. தூரம் சுற்றித்திரிந்த பெண்ணால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்