இரு தரப்பு வர்த்தகத்தில் சாதனை - ரஷிய அதிபர் புதின்
கூடங்குளத்தில் இந்தியாவின் மிகப்பெரும் அணுமின் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் என ரஷிய அதிபர் புதின் கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
டெல்லி ஐதராபாத் இல்லத்தில் இந்தியா - ரஷியா இடையேயான 23-வது மாநாட்டிற்கு பின் இரு தலைவர்களும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
பயங்கரவாதத்தை எதிர்க்க உலகளாவிய ஒற்றுமை தேவை.பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தின் மீதான நேரடி தாக்குதல். பகல்காம் தாக்குதலாகட்டும் குரோக்ஸ் நகர கோழைத்தன தாக்குதலாகட்டும் அனைத்திற்கும் பயங்கரவாதமே காரணம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் ரஷியாவும் தோளோடுதோள் நின்று வருகின்றன என்றார்.
அதனை தொடர்ந்து ரஷிய அதிபர் புதின் பேசியதாவது:-
ரஷிய குழுவினருக்கும் இந்திய ஜனாதிபதி, பிரதமர் அளித்த அன்பான உபசரிப்புக்கு நன்றி. ரஷிய தூதுக்குழுவுக்கு அளித்த விருந்தோம்பலுக்கு, இரவு விருந்திற்காக பிரதமர் மோடிக்கு நன்றி.
ரஷியா, பெலாரசில் இருந்து இந்திய பெருங்கடல் வழியே சர்வதேச வடக்கு - தெற்கு போக்குவரத்து வழித்தடம் தொடங்கப்படும். புதிய சர்வதேச போக்குவரத்து மற்றும் தளவாட வழித்தடங்களை உருவாக்க இணைந்து செயலாற்றுவோம். அணுமின் நிலையத்திட்டங்கள் இந்தியாவின் தொழில்கள், வீடுகளுக்கு மலிவான, சுத்தமான மின்சாரத்தை தரும். 6 அணு உலைகளில் ஏற்கனவே 2-ல் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. அணு உலையை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வருவது இந்தியாவின் எரிசக்தி தேவைக்கான பங்களிப்பை தரும்.
கடந்தாண்டு இந்தியா - ரஷியா வர்த்தக வருவாய் 12 சதவீதம் அதிகரித்து மற்றொரு சாதனை படைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிலும் இரு தரப்பு வர்த்தகம் 100 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா - ரஷியா இடையே சுதந்திர வர்த்தக மண்டலத்தை உருவாக்குவது வணிக வளர்ச்சிக்கு உதவும்.
அமெரிக்காவுக்கு எங்கள் நாட்டின் எண்ணெய் வாங்க உரிமை இருக்கும்போது, இந்தியாவுக்கு ஏன் அந்த உரிமை இருக்கக் கூடாது? ஜனாதிபதி டிரம்ப் உடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.