அதிக ஒலி எழுப்பும் வழிபாட்டு தலங்கள் மீது நடவடிக்கை; போலீசாருக்கு, கலெக்டர் ராஜேந்திரா உத்தரவு

அதிக ஒலி எழுப்பும் வழிபாட்டு தலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு, கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டார்.

Update: 2022-06-19 15:10 GMT

மங்களூரு;

குறைகள் தீர்க்கப்படும்

கர்நாடகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டு, நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராமங்களுக்கு சென்று கிராம தங்கல் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும், கிராம தங்கல் நிகழ்ச்சி நடைபெற்று, பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தட்சிண கன்னடா மாவட்டம் மூட்பித்ரி அருகே அலங்கார் கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராம தங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது எண்டோசல்பான் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வசித்து வருவதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு சார்பில் மறுவாழ்வு மையம் அமைக்க காலதாமதம் ஆகிறது என அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான பீர் முகமது கூறினார். மேலும், நோயால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது தாய்மார்கள் பாதுகாத்து வருவதால், அவர்களுக்கு நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

வழிபாட்டு தலங்கள்

அதேபோல் மற்றொரு பெண் கூறுகையில், சாதி அடிப்படையில் தனக்கு அரசு சார்பில் நிலம் ஒதுக்கப்படவில்லை என்றார். கோயிலா கிராம முன்னாள் தலைவர் பாலகிருஷ்ண கவுடா பேசுகையில், அந்த பகுதியில் உள்ள வழிப்பாட்டு தலம் ஒன்றில் அரசு அறிவுரையை பின்பற்றாமல் அதிக ஒலி எழுப்பப்பட்டு வருவதாக புகார் கூறினார்.

இதையடுத்து கலெக்டர் ராஜேந்திரா பேசுகையில் கூறியதாவது:-

எண்டோசல்பான் நோய் பாதிப்பிற்கு சிகிச்சை அளிப்பதற்கு, மறுவாழ்வு மையம் அமைப்பது குறித்து அரசுக்கு தெரியப்படுத்துவேன். அரசு சார்பில் நிலம் வழங்குவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

மேலும், அரசு அறிவுரைகளை பின்பற்றாமல் அதிக ஒலி எழுப்பி வரும் வழிப்பாட்டு தலங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், அவர் அரசு வேலைகள் பெறுவதற்கு பொதுமக்களிடம் லஞ்சம் பெற கூடாது என்றும் லஞ்சம் வாங்கினால் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்