மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை விளம்பரப்படுத்தவே நடிகைகள் நாடாளுமன்றத்துக்கு அழைப்பு - தேசியவாத காங்கிரஸ் விமர்சனம்

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை விளம்பரப்படுத்தவே நடிகைகள் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

Update: 2023-09-22 00:29 GMT

புதுடெல்லி,

புதிய நாடாளுமன்ற கட்டிடம் கடந்த 19-ந் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. முதல் அலுவலாக மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே புதிய நாடாளுமன்றத்துக்கு சினிமா நடிகைகள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டதில் இருந்து, கங்கனா ரணாவத், ஈஷா குப்தா, குஷ்பு, தமன்னா உள்ளிட்ட பல நடிகைகள் நாடாளுமன்றத்தை பார்வையிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை விளம்பரப்படுத்துவதற்காகவே நடிகைகள் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்படுவதாக சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்ட நடிகைகள் யாராவது பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து பேசியதுண்டா? மணிப்பூரிலோ அல்லது இந்தியாவின் வேறு எந்த இடத்திலோ பெண்கள் துன்பப்பட்டபோது அவர்கள் எங்கே இருந்தார்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்