ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் போராட்டம் எதிரொலி: விமான சேவைகள் 2வது நாளாக ரத்து

விமான சேவை பாதிப்பால் பயணிகளின் சிரமத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கிறோம் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Update: 2024-05-09 11:20 GMT

புதுடெல்லி,

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான போக்குவரத்து நிறுவனங்களை கடந்த 2022-ம் ஆண்டு டாடா குழுமம் வாங்கியது.

தொடர்ந்து அதே பெயரில் இயங்கி வரும் இந்த விமானங்கள், உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றன. இதில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் 200-க்கு மேற்பட்ட ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவில் இருந்து திடீரென உடல்நலக்குறைவு விடுப்பு எடுத்து போராட்டத்தில் குதித்துள்ளனர். விமான நிறுவனத்தின் தவறான நிர்வாகத்தை கண்டித்து இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே உரிய காரணங்களின்றி விடுப்பு எடுத்த 30 ஊழியர்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. ஊழியர்கள் விடுப்பு குறித்து நடத்திய விசாரணையில் அவர்கள் தெரிவித்த காரணங்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்றும் அதன் காரணமாக 30 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும், திடீர் ஊழியர்கள் விடுப்பு காரணமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் ஸ்தம்பித்து போனதாகவும் விரைவில் விமான இயக்கங்களை பழைய நிலைக்கு கொண்டு வர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை செயல் அதிகாரி அலோக் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் கேபின் க்ரூ ஊழியர்கள் திடீர் விடுப்பு காரணமாக இரண்டாவது நாளாக ஏறத்தாழ 74 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை - கொல்கத்தா, சென்னை - சிங்கப்பூர், சென்னை - மும்பை,திருச்சி - சிங்கப்பூர், மற்றும் ஜெய்ப்பூர் - மும்பை உள்ளிட்ட உள் மற்றும் வெளிநாடு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்