பா.ஜனதா ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரணை-மந்திரி பிரியங்க் கார்கே பேட்டி

கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மந்திரி பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.

Update: 2023-06-16 21:13 GMT

பெங்களூரு:-

கர்நாடக கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஊழல்கள் குறித்து விசாரணை

கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து எந்த அமைப்புகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து முடிவு செய்வோம். வெவ்வேறு வகையான ஊழல் புகார்கள் உள்ளதால், வெவ்வேறு ரீதியில் குழுக்கள் மூலம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. பிட்காயின் முறைகேடு குறித்து விசாரிக்க சைபர் குற்றத்தை கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் வேண்டும்.

சில ஊழல்களை நீதித்துறை விசாரிக்க வேண்டிய நிலை உள்ளது. தேர்தலுக்கு முன்பு நாங்கள், முந்தைய பா.ஜனதா ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரிப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம். அந்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுவோம். முந்தைய ஆட்சியில் நடைபெற்ற பிட்காயின், சப்-இன்ஸ்பெக்டர் நியமன முறைகேடு, கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனம், மின்துறை என்ஜினீயர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து நாங்கள் விசாரணை நடத்த இருக்கிறோம்.

ஊழல் செய்தவர்கள் யார்?

மக்கள் எங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் நாங்கள் பணியாற்றுவோம். கங்கா கல்யாண் திட்ட முறைகேடு குறித்து விதான சவுதா போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவாகியுள்ளன. கல்யாண கர்நாடக வாரிய நிதியிலும் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்படும்.

விசாரணைக்கு பிறகு ஊழல் செய்தவா்கள் யார் என்பது தெரியவரும். ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்த விதமான தயவு பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்