ஆந்திர பிரதேசம்; ரூ. 6.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்..!! சுங்கத்துறையினர் அதிரடி..!!
ரூ.6.4 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.;
image courtesy; ANI
விசாகபட்டினம்,
சென்னையிலிருந்து ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு தங்கம் கடத்தபடுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து விஜயவாடா நோக்கிச் சென்ற காரை போபள்ளி சுங்கச்சாவடியில் மறித்து சோதனை மேற்கொண்டனர். அதில் 4.3 கிலோ அளவிலான தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காரை ஓட்டி வந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைதான நபரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அவரது வீட்டில் 6.8 கிலோ கிராம் தங்கம், ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. மொத்தமாக அவரிடம் மேற்கொண்ட சோதனையில் குவைத், கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் இருந்து ரூ. 6.4 கோடி மதிப்புள்ள 11 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
கடத்தப்பட்ட தங்க நகைகள் அனைத்தும் துபாய் மற்றும் இலங்கையை சேர்ந்தவை என அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கம் வெளிநாட்டை சேர்ந்தது என்பதை மறைக்க அதன் மீது இருந்த வெளிநாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தெரிய வருகிறது.
கடத்தல் தங்கத்தை எடுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாகப்பட்டினம் நீதிமன்றம் அவரை 13 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.