எஸ்.ஐ.ஆர்.பணிகளை உடனே நிறுத்த வேண்டும்; மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தல்

அனைத்து அமைப்புகளையும் ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றிவிட்டது என ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.;

Update:2025-12-09 16:49 IST

புதுடெல்லி,

மக்களவையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி.,ராகுல் காந்தி பேசியதாவது:-

மகாத்மா காந்தி ஏன் காதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அவர் ஏன் முழு இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் காதி என்ற கருத்தைச் சுற்றி வடிவமைத்தார், ஏன் அவர் காதியை மட்டுமே அணிந்தார்? ஏனென்றால் காதி என்பது வெறும் துணி அல்ல. காதி என்பது இந்திய மக்களின் வெளிப்பாடு.

நீங்கள் எந்த மாநிலத்திற்குச் சென்றாலும், நீங்கள் வெவ்வேறு துணிகளைக் காண்பீர்கள். ஹிமாச்சலி தொப்பி, அசாமி கோம்சா, பனார்சி சேலை, காஞ்சிபுரம் சேலை, நாகா ஜாக்கெட். இந்த துணிகள் அனைத்தும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை நீங்கள் காண்பீர்கள்.இந்த துணிகள் அழகாக இருக்கின்றன. ஆனால் நீங்கள் சற்று ஆழமாகப் சிந்தித்து பார்த்தால், அவை ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான சிறிய நூல்கள் ஒன்றையொன்று தழுவிக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள். ஒரு தனி நூல் ஆடையாகாது. பல நூல்கள் இணைந்தால் தான் ஆடை உருவாகிறது.

140 கோடி மக்கள் இணைந்துதான் நம் நாடு.பல மதங்கள், பல சமுதாயங்கள், பல மொழிகளை கடந்து அனைவரும் ஒன்றாக இணைந்ததே நம் நாடு. இன்று நான் நிற்கும் இந்த சபை, மக்களவை, மாநிலங்களவை, நாடு முழுவதும் உள்ள சட்டமன்றம், நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்துகள், வாக்குரிமை இல்லாவிட்டால் அவை எதுவும் இருக்காது. அனைத்து அமைப்புகளையும் ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றிவிட்டது. காந்தியை கொன்ற பின் பல அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி வருவதாக மக்களவையில் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். ராகுல் காந்தியின் ஆர்.எஸ்.எஸ். குறித்த பேச்சுக்கு எதிப்பு தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

எஸ்.ஐ.ஆர் குறித்து பேசாமல் விவாதத்தை ராகுல் காந்தி திசை திரும்புவதாக மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜு குற்றம்சாட்டினார். தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து பேசுமாறு ராகுல் காந்திக்கு மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, எஸ்.ஐ.ஆர் குறித்துதான் பேச வருகிறேன். அதற்குள் குறுக்கிடாதீர்கள்.எஸ்.ஐ.ஆர்.பணிகளை உடனே நிறுத்த வேண்டும்.பாஜக அரசு எல்லாவற்றையும் பேச மட்டுமே செய்கிறது. ஆனால் செயலில் ஒன்றுமில்லை. நான் சொல்லக் கூடியது கசப்பான உண்மைகள்; எதிரணியில் இருக்கும் ஆளுங்கட்சியினரால் நிச்சயமாக ஏற்க முடியாது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்