நாடாளுமன்ற மாநிலங்களவையில் திருச்சி சிவா - மத்திய மந்திரி எல்.முருகன் வாக்குவாதம்
நாட்டுக்காக போராடியவர்களை தி.மு.க. அடையாளம் காட்ட தவறியதில்லை என்று தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கூறினார்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று வந்தே மாதரம் குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் திலகரின் பெயரால் திடல் வைத்திருக்கிறோம். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் சாலைகள் வைத்திருக்கிறோம். காந்தியின் மனைவியின் பெயரால் கஸ்தூரிபாய் காந்தி என்று மருத்துவமனை வைத்திருக்கிறோம். நேருவின் மனைவி பெயரால் கமலா நேரு பூங்கா என்று வைத்திருக்கிறோம். நான் கேட்கிறேன்.
எங்கேயாவது வடமாநிலங்களில் வ.உ.சிதம்பரனார் பெயரில் சாலைகள் உண்டா. பாரதியார் பெயரில் தெரு உண்டா. யாருக்காவது வீரபாண்டிய கட்டப்பொம்மனை தெரியுமா. ஏன் புறக்கணிக்கப்பட்டோம். கேட்க வேண்டியது நாம்தான். இந்த நாட்டுக்காக போராடியவர்களை தி.மு.க. அடையாளம் காட்ட தவறியதில்லை. வெள்ளையனை முதன்முதலில் எதிர்த்தது பூலித்தேவன்தான். அதன்பிறகு வீரபாண்டிய கட்டப்பொம்மன். இவர்களை வடமாநிலத்தில் உள்ளவர்கள் யாருக்காவது தெரியுமா. நான் வேதனையுடன் கேட்கிறேன். இது என் தம்பி முருகனுக்கு (மத்திய இணை மந்திரி) தெரியும். உங்களுக்கு (சபாநாயகர் சி.பி.ராதாகிருஷ்ணன்) தெரியும்” என்று கூறினார்.
இவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்தபோது, மத்திய இணை மந்திரி எல்.முருகன் எழுந்து "உறுப்பினர் தவறாக பேசுகிறார்" என்று குறிப்பிட்டார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே, மாநிலங்களவை சபாநாயகர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய இணை மந்திரி எல்.முருகனை அமரக் கூறினார். மேலும், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவையும் "நேரம் முடிந்துவிட்டது. விரைவாக பேச்சை முடியுங்கள்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, “'ஜெய்ஹிந்த்' என்ற முழக்கத்தை ஏற்படுத்தியவர் தமிழகத்தை சேர்ந்த செண்பகராமன். செண்பகராமன் பெயரை அடுத்த ஐ.என்.எஸ் கப்பலுக்கு சூட்டுங்கள். பாராட்டுகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்த விவாதத்தில் பங்கேற்ற 3 பேருமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.