வேளாண் ஏற்றுமதியை 2022-23 நிதியாண்டில் 2356 கோடி டாலராக உயர்த்த திட்டம் - மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (அபெடா) வேளாண் ஏற்றுமதியை 2356 கோடி டாலராக உயர்த்த உத்தியை வகுத்துள்ளது.

Update: 2022-08-14 12:43 GMT

புதுடெல்லி,

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின், விளைப் பொருட்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பான "வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (அபெடா)" 2022-23 நிதியாண்டில் 23.56 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் ஏற்றுமதி இலக்கை அடைவதற்கு உத்தியை வகுத்துள்ளது.

இதன்மூலம், வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க முடியும். இதன்படி, பல்வேறு முக்கிய வெளியீடுகள், மின்னணு தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களின் உதவியுடன் சாத்தியமான தயாரிப்புகளின் பட்டியலை முன்னிலைப்படுத்துவதன் மூலம், ஏற்றுமதியாளர்கள், விவசாயிகள், உணவு பதப்படுத்துபவர்கள், தளவாடங்கள் வழங்குநர்கள், அந்நிய செலாவணி மேலாண்மை நிறுவனங்கள் போன்றவற்றுடன் வலுவான மற்றும் வழக்கமான தொடர்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சமூக ஊடக தளங்களில், சாத்தியக்கூறுகள் உள்ள பொருட்களின் பட்டியல் காட்சிப்படுத்தப்படும். இது தவிர இந்தியாவின் ஏற்றுமதிக்கு சாத்தியமான தயாரிப்புகளின் நாடு வாரியான மற்றும் பொருட்கள் வாரியான குறிப்பிட்ட தேவைகள் ஏற்றுமதியாளர்களுக்காக அபெடா தளத்தில் குறிப்பிடப்படும்.

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு, வளர்ந்து வரும் வேளாண் தொழில்முனைவோருக்கு செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப பயிற்சியை வழங்கி, வேளாண் ஏற்றுமதியை கவரக்கூடிய தொழிலாக அவர்கள் தேர்ந்தெடுக்க ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

புவிசார் குறியீட்டு பொருட்கள் குறித்து பங்குதாரர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகளை வடகிழக்கு பகுதிகளில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்