காசோலை மோசடி வழக்கில் மந்திரி நாகேந்திராவுக்கு கைது வாரண்டு: பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவு

காசோலை மோசடி வழக்கில் மந்திரி நாகேந்திராவுக்கு கைது வாரண்டு பிறப்பித்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-10-08 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை மந்திரியாக இருந்து வருபவர் நாகேந்திரா. இவர் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் காசோலை மோசடி தொடர்பாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த ராகவேந்திரா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜி.ப்ரீத் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் அந்த வழக்கு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே 3 முறை கோர்ட்டில் ஆஜராகும்படி மந்திரி நாகேந்திராவுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் 3 முறையும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. நேற்று முன்தினம் நடந்த விசாரணைக்கும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, மந்திரி நாகேந்திராவுக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத கைது வாரண்டு பிறப்பித்து நீதிபதி ஜி.ப்ரீத் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்