ராஜஸ்தானில் அரசை கவிழ்க்க முடியாத எரிச்சலில் பா.ஜ.க. உள்ளது: அசோக் கெலாட் பேச்சு

அரசை கவிழ்க்க அமலாக்க துறை மற்றும் சி.பி.ஐ. அமைப்புகள் ஆகியவற்றை பா.ஜ.க. தவறாக பயன்படுத்துகிறது என்றும் கெலாட் சாடியுள்ளார்.

Update: 2023-11-23 09:14 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதில், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் பிரசாரத்தில் ஈடுபடும்போது, இந்த அரசை தொடர செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தினார்.

அவருடைய பதவி காலங்களில் செய்த சாதனைகள், பத்து உத்தரவாதங்களை நிறைவேற்றியது ஆகியவற்றை சுட்டி காட்டியதுடன், திரும்பவும் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், கூடுதலாக 7 வாக்குறுதிகளையும் அமல்படுத்துவேன் என்று கூறினார்.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பிரதமரும் அவருடைய மொத்த குழுவினரும் ராஜஸ்தானில் முகாமிட்டுள்ளனர். ஆனால், அவர்கள் நவம்பர் 25-ந்தேதி தேர்தல் வரை மட்டுமே தங்கியிருப்பார்கள்.

அதன்பின்னர், அந்த கட்சி முகம் காட்டாது என்று கூறினார். அவர் தொடர்ந்து கூறும்போது, மராட்டியம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், அரசை கவிழ்த்து விட்டு பா.ஜ.க. ஆட்சியமைத்தது.

ஆனால் அதுபோன்று ராஜஸ்தானில் அவர்களால் செய்ய முடியவில்லை. அதனால், அவர்கள் எரிச்சலில் உள்ளனர் என பேசியுள்ளார்.

அரசை கவிழ்க்க அமலாக்க துறை மற்றும் சி.பி.ஐ. அமைப்புகள் ஆகியவற்றை பா.ஜ.க. தவறாக பயன்படுத்துகிறது என்றும் கெலாட் சாடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்