எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு பிரச்சினைகளை உருவாக்குகிறது' - சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு பிரச்சினைகளை உருவாக்குவதாக மத்திய அரசு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

Update: 2023-04-10 01:50 GMT

ஐதராபாத்,


தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இடதுசாரி கட்சிகளின் கூட்டுக்கூட்டம் நடந்தது. அங்குள்ள கண்காட்சி மைதானத்தில் நடந்த இந்த பிரமாண்ட கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் மாநில செயலாளர்கள் இணைந்து செயல்படுவதற்கு வந்திருப்பது சிறப்பானது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பா.ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பிரச்சினைகளை உருவாக்குகிறது. அங்கு பா.ஜனதா அரசை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறது.

தனது மதச்சார்பு அரசியல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, அவற்றை தனியாரிடம் ஒப்படைப்பது போன்றவற்றால் கார்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. கடன் தள்ளுபடி கேட்டு விவசாயிகள், தொழிலாளர்கள் கடந்த 5-ந்தேதி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். ஆனால் அரசோ, தனது கார்பரேட் நண்பர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்கிறது.

ராமநவமி மற்றும் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டங்களில் வன்முறை வெடித்தது, இதற்கு முன்பு நாடு கண்டிராதது. கர்நாடகாவில் இந்துத்துவ வாக்குகளை பெறுவதற்காக திப்பு சுல்தான் பிரச்சினையை கிளப்பி இருக்கிறது.

எனவே நாட்டின் அரசியல் சாசனம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பற்ற தன்ைமயை பாதுகாப்பதற்கு மோடி அரசு அகற்றப்பட வேண்டும். 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால் இதில் 0.1 சதவீதத்தினர் மட்டுமே குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்