சந்திரயான்-3: விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் நெருக்கமான படங்களை இஸ்ரோ வெளியிட்டது..!

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் நெருக்கமான படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

Update: 2023-08-18 10:30 GMT

சென்னை,

'சந்திரயான்-3' விண்கலத்தை ரூ. 615 கோடி செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 'எல்.வி.எம்.3 எம்4' ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14-ந்தேதி இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் தென் துருவப்பகுதி ஆய்வு பணிக்கான இந்த முயற்சி வெற்றிகரமாக நடந்தது.

இதையடுத்து 'சந்திரயான்-3' விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்று வட்டப்பாதையின் இறுதி கட்டத்தை எட்டியது. இதனை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

தற்போதைய நிலையில், 'சந்திரயான்-3' விண்கலம் 100 கி.மீ. தொலைவிலான நிலவு அடுக்குக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விண்கலத்தில் உள்ள உந்துவிசை தொகுதியில் இருந்து தரைஇறங்கும் 'விக்ரம் லேண்டரை' தனியாக பிரிக்கும் நடவடிக்கையில் விஞ்ஞானிகள் நேற்று இறங்கினர். அதன்படி, நிலவை நெருங்கிய நிலையில் 'சந்திரயான்-3' விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து அவை இரண்டும் தனித்தனி பயணங்களை தொடங்கியது.

தற்போது நிலவு சுற்றுப்பாதையில் குறைந்தபட்சம் 153 கி.மீ., அதிகபட்சம் 163 கி.மீ. என்ற தொலைவில் விக்ரம் லேண்டர் பயணித்து வருகிறது. படிப்படியாக இதன் உயரம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. திட்டமிட்டபடி 23-ந்தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் 'சந்திரயான்-3' விண்கலத்தை தரை இறக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நிலவில் தரை இறங்குவதற்கான இடங்களை லேண்டர் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர். இந்த நிலையில் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் நெருக்கமான படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 15-ந்தேதி லேண்டர் நிலை கண்டறியும் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் நேற்று லேண்டர் இமேஜர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்