கார் விபத்தில் சிக்கியது; காங்கிரஸ் வேட்பாளர் பாபுராவ் சின்சனசூர் படுகாயம்

பிரசாரத்திற்கு சென்று திரும்பிய போது கார் விபத்தில் சிக்கியதால் காங்கிரஸ் வேட்பாளர் பாபுராவ் சின்சனசூர் படுகாயம் அடைந்தார்.;

Update:2023-04-16 00:15 IST

பெங்களூரு:

யாதகிரி மாவட்டம் குர்மித்கல் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பாபுராவ் சின்சனசூர் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தை முடித்துக்கொண்டு அவர் கலபுரகி மாவட்டம் சாந்திநகரில் உள்ள தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

அந்த கார், கலபுரகி வானொலி நிலைய சாலையில் நள்ளிரவு 12.30 மணி அளவில் வந்தது. அப்போது டிரைவர் கண் அயர்ந்ததாக தெரிகிறது. இதனால் கார் சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்கி தறிகெட்டு ஓடி மின்கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் வேட்பாளர் பாபுராவ் சின்சனசூர் பலத்த காயம் அடைந்தார். அவரது தலை, கழுத்து, முதுகில் பலத்த ரத்த காயங்கள் ஏற்பட்டன. ஆனால் டிரைவர், பாதுகாப்பு போலீஸ்காரர் காயமின்றி தப்பினர். விபத்து நடந்ததும் அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பாபுராவ் சின்சனசூரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கலபுரகியில் உள்ள யுனைடெட் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரது தேர்தல் பிரசாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாபுராவ் சின்சனசூர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது டிக்கெட் கொடுக்காத அதிருப்தியில் பா.ஜனதாவில் சேர்ந்தார். அக்கட்சி அவருக்கு மேல்-சபை உறுப்பினர் பதவி கொடுத்திருந்தது. அதனை ராஜினாமா செய்த அவர் கடந்த வாரம் தான் காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்