துணியை அழுக்காக்கியதால் ஆத்திரம்; 6 வயது குழந்தையை அடித்து கொன்ற தந்தை, சித்தி கைது
குழந்தையின் உடலில் விலா எலும்பு முறிவு உள்பட மொத்தம் 13 இடங்களில் மோசமான காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள தாஸ்னா பகுதியை சேர்ந்தவர் அக்ரம். இவரது மனைவி தரானா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் இருந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தரானா உயிரிழந்துவிட்டார். அதன் பிறகு நிஷா என்ற பெண்ணை அக்ரம் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், அக்ரமின் 6 வயது பெண் குழந்தை ஷிபா, கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஷிபா எதிர்பாராத விதமாக சேற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அணிந்திருந்த உடை முழுவதும் சேறாகி உள்ளது.
இதையடுத்து, அழுக்கு உடையுடன் வீட்டிற்கு வந்த ஷிபாவை அவரது தந்தை அக்ரம் மற்றும் சித்தி நிஷா ஆகிய இருவரும் கடுமையாக தாக்கியுள்ளனர். அது மட்டுமின்றி, அவர்கள் குழந்தை ஷிபாவை வீட்டின் மாடியில் கடும் குளிரில் இரவு முழுவதும் தவிக்க விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திங்கட்கிழமை காலை குழந்தை ஷிபா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் உடலில் விலா எலும்பு முறிவு உள்பட மொத்தம் 13 இடங்களில் மோசமான காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து குழந்தையின் தந்தை அக்ரம் மற்றும் சித்தி நிஷா ஆகிய இருவரையும் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.