சிக்காவி தொகுதியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் மாற்றம்

சிக்காவி தொகுதியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எதிராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.;

Update:2023-04-20 04:17 IST

பெங்களூரு:

வேட்பாளர் மாற்றம்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கலுக்கு இன்று(வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். காங்கிரஸ் கட்சி இதுவரை 4 வேட்பாளர் பட்டியல் மூலம் 216 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இன்னும் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டி இருந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளுக்கு 5-வது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.

இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை எதிர்த்து சிக்காவி தொகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முகமது யூசூப் சவனூருக்கு பதிலாக யாசீர் அகமதுகான் பதான் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முல்பாகல்-டாக்டர் பி.சி.முத்துகங்காதர், கே.ஆர்.புரம்-டி.கே.மோகன், புலிகேசிநகர்-ஏ.சி.சீனிவாஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சி.வி.ராமன்நகர் உள்பட இன்னும் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டி உள்ளது.

அகண்ட சீனிவாசமூர்த்தி

புலிகேசிநகர் தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள அகண்ட சீனிவாச மூா்த்திக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தி வந்தார். அதற்கு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அந்த தொகுதியில் வேட்பாளரை இறுதி செய்வதில் இழுபறி நிலை உண்டானது. தேவனஹள்ளி தொகுதியில் தனக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று ஏ.சி.சீனிவாஸ் கேட்டிருந்தார். ஆனால் அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எச்.முனியப்பாவுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது.

இதையடுத்து ஏ.சி.சீனிவாசுக்கு புலிகேசிநகர் தொகுதியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கே.எச்.முனியப்பா கேட்டு வந்தார். அவரது பரிந்துரையை ஏற்று புலிகேசிநகரில் ஏ.சி.சீனிவாசுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் அகண்ட சீனிவாச மூர்த்தி சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளார்.

சம்பத்ராஜ்

இதனால் காங்கிரசுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகளில் சேதாரம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. சி.வி.ராமன்நகர் தொகுதியில் முன்னாள் மேயர் சம்பத்ரராஜ் டிக்கெட் கேட்கிறார். ஆனால் அவருக்கு டிக்கெட் வழங்க கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் அந்த தொகுதிக்கு வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்