மதுபான கொள்கை ஊழல் வழக்கு: மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரின் ரூ.52 கோடி சொத்து முடக்கம்
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரின் 52 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
டெல்லி,
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது.
பின்னர், டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது தனியே அமலாக்கத்துறை கடந்த மார்ச் 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றன.
இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் கவுதம் மல்ஹொத்ரா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா அவரது மனைவி சீமா, தொழிலதிபர் கவுதம் மல்ஹொத்ரா உள்ளிட்டோரின் 52 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.