மக்கள் மாற்றத்தை வரவேற்கும் போது ஜனநாயகம் வலுப்பெறும் - மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேச்சு

மக்கள் மாற்றத்தை வரவேற்கும் போது ஜனநாயகம் வலுப்பெறும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

Update: 2022-10-04 15:27 GMT

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீருக்கு மூன்று நாள் பயணமாக சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இன்று காஷ்மீர் எல்லைப்புர மாவட்டமான ராஜோரியில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலுக்குச் சென்று வழிபட்டார். அதன்பின்னர் அங்கு நடந்த பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின் இங்குள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியல் இன மக்கள், மலைவாழ் மக்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீட்டுக்கான பலன்கள் கிடைத்துள்ளன.

வளர்ச்சிக்கு பதிலாக பிரிவினைவாதத்தை வளர்த்த ஜம்மு காஷ்மீரின் 3 குடும்பங்களை அடையாளம் காண்பது முக்கியம். ஜம்மு காஷ்மீரில் முன்பு கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன, இப்போது இதுபோன்ற சம்பவங்களை பார்த்தீர்களா? இப்போது அப்படிப்பட்ட சம்பவங்கள் இல்லை.

இப்போது வந்துள்ள மாற்றத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் மாற்றத்தை வரவேற்கும் போது ஜனநாயகம் வலுப்பெறும். பயங்கரவாதத்தை ஆதரித்த நிர்வாகத்தில் இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை வேரறுத்துள்ளோம்.

கடந்த மாதங்களில் ஜம்முவிற்கு 50 லட்சம் சுற்றுலாப் பயணிகளும், காஷ்மீருக்கு 22 லட்சம் சுற்றுலாப் பயணிகளும் வந்து சாதனை படைத்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு சுற்றுலா பெரிதும் பயனளிக்கும். முன்பு கற்களை கையில் பிடித்த இளைஞர்களுக்கு பிரதமர் மோடி கணினி மற்றும் வேலைவாய்ப்பு அளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் வளச்சியே பிரதமர் மோடியின் பிரதான நோக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்