ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் : எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-24 13:35 GMT

புதுடெல்லி,

2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் உடனடியாக கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவருக்கு ஜாமீனும் வழங்கியது சூரத் நீதிமன்றம்.

இந்த நிலையில் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.நீதிமன்ற தீர்ப்பையடுத்து, வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதல்வர் மு.க ஸ்டாலின்

இந்தியாவின் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய அரசியல் கட்சியின் பெருந்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கூட கருத்துச் சொல்லும் ஜனநாயக உரிமை என்பது கிடையாது என்று மிரட்டும் தொனியில் இருக்கிறது இந்த நடவடிக்கை.

ராகுல் காந்தி அவர்கள் பேசிய கருத்து அவதூறானது என்ற அடிப்படையில் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை தரப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை விதித்த நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா அவர்கள், இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதற்காகக் கால அவகாசத்தை ராகுல் காந்தி அவர்களுக்கு வழங்கி இருக்கிறார். 'வழக்கை மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக தீர்ப்பை அமல்படுத்துவதற்கு 30 நாட்கள் தடை விதிக்கிறேன்' என்றும் சொல்லி இருக்கிறார்.

மேல்முறையீடு செய்வது என்பது தண்டனை பெற்ற எவருக்கும் உள்ள அடிப்படை உரிமை ஆகும். அதனைத் தனது தீர்ப்பிலேயே நீதிபதி சுட்டிக்காட்டி 30 நாட்கள் வழங்கி இருக்கிறார். அதற்குள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது ஆகும். 2 ஆண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திவிடவில்லை. மாவட்ட நீதிமன்றம்தான் தீர்ப்பு தந்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு இருக்கிறது. இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டியது உச்சநீதிமன்றம் ஆகும். இதற்காகவே காத்திருந்ததைப் போல 23-ஆம் தேதி தீர்ப்பு, 24-ஆம் தேதி பதவிப் பறிப்பு என்று நடவடிக்கை எடுத்துள்ளது பா.ஜ.க. அரசு.

ராகுல் காந்தி அவர்களைப் பார்த்து எந்தளவுக்கு பா.ஜ.க. தலைமை பயந்து இருக்கிறது என்பது இதன்மூலம் தெரிகிறது. அவரது இந்திய ஒற்றுமைப் பயணம் இந்திய மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் இதற்குக் காரணம் ஆகும். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்குச் சரியான பதிலை ஒன்றிய அரசில் இதுவரை யாரும் சொல்லவில்லை. மீண்டும் அவரை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தால், தங்களது அரசியலுக்கு நெருக்கடி ஏற்படும் என அஞ்சியே ராகுல் காந்தி அவர்களைத் தகுதிநீக்கம் செய்துள்ளார்கள். இந்தத் தகுதிநீக்க நடவடிக்கைகளின் மூலமாக ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பா.ஜ.க. இழந்துவிட்டது.

நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லாமல், கேள்வி கேட்டவரை அங்கிருந்து அப்புறப்படுத்துவது ஒன்றிய அரசுக்கு அழகல்ல. இந்த நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.ராகுல் காந்தி அவர்கள் மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என்பதை உணர்ந்து இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறும் போது

ராகுல் தகுதி நீக்கத்தை எதிர்த்து சட்ட, அரசியல் ரீதியாக போராடுவோம். எங்களின் குரலை நசுக்க முடியாது. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.பார்லி., கூட்டுக்குழு விசாரணை மற்றும் பிரதமர் மோடிக்கும் அதானிக்குமான தொடர்பு போன்றவற்றை மறைக்க ராகுகல் தகுதி நீக்கப்பட்டுள்ளார். இது இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என கூறி உள்ளார்.

 மமதா பானர்ஜி கூறியதாவது:-

பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பா.ஜ.,வின் பிரதான இலக்காக மாறியுள்ளனர்.கிரிமினல் பின்னணி கொண்ட பா.ஜ., தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படுகின்றனர்.ஆனால் எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினால் தகுதி நீக்கம் செய்கின்றனர். இன்று, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் வீழ்ச்சியை கண்டுள்ளோம் என கூறி உள்ளார்

மராட்டிய முன்னாள் முதல் மண்ட்திரி உத்த்வ தாக்கரே கூறியதாவது:-

ராகுலின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டது. திருடன், திருடன் என்று அழைப்பது நம் நாட்டில் குற்றமாகிவிட்டது.திருடர்களும் கொள்ளையர்களும் இன்னும் சுதந்திரமாக இருக்கிறார்கள். ராகுல் தண்டிக்கப்பட்டுள்ளார்.இது ஜனநாயகத்தை கொலை செய்துள்ளனர்.இது சர்வாதிகாரத்தை முடிவு கட்டுவதற்கான துவக்கம். எதிர்த்து போராடுவது மட்டுமே நல்ல முடிவை கொடுக்கும் என கூறினார்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:-

மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதை ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசினார் என்று குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கில், விசாரணை என்ற பெயரில் போலி நாடகம் நடத்தி, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நீதியைக் குழிதோண்டிப் புதைத்த செயலாகும்.

இதைக் காரணம் காட்டி, 24 மணி நேரத்திற்குள், ராகுல்காந்தி அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை நீக்கிவிட்டதாக மக்களவையில் மிருகத்தனமாக பெரும்பான்மை கொண்டிருக்கின்ற ஆணவத்தில் பாஜக இந்த அக்கிரமச் செயலைச் செய்திருக்கிறது. ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய நாசிசத்தைப் போல, இத்தாலியில் முசோலினி நடத்திய பாசிசத்தைப் போல, உகண்டாவில் இடிஅமீன் நடத்திய கொடுங்கோல் ஆட்சியைப் போல, நரேந்திர மோடி அரசு செயல்படுகிறது.

விநாசகால விபரீத புத்தி என்று கூறுவதற்கு ஏற்ப இந்தத் தகுதி நீக்கத்தை செய்திருக்கிறது. இரண்டு ஆண்டுகள் தண்டனை என்று சொன்னாலும், பிணையில் வருவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை நீதிமன்றமே தந்திருக்கிறது. நாட்டு மக்கள் இதற்கெல்லாம் சேர்த்து நரேந்திர மோடி அரசுக்கு தண்டனை கொடுப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.

பினராயி விஜயன்

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது, சங்பரிவார் அமைப்புகள் ஜனநாயகத்தின் மீது தொடுத்த வன்முறை தாக்குதல் என்று கூறியுள்ளார்.

கெஜ்ரிவால்

நாட்டில் ஒரே ஒரு கட்சியும் ஒரே ஒரு தலைவரும் தான் இருக்க வேண்டும் என்ற சூழலை அவர்கள் (பாஜக) உருவாக்குகிறார்கள். பிற அனைத்துக் கட்சிகளையும் ஒழித்துவிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இதைத்தான் சர்வாதிகாரம் என்கிறோம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை விட மோசமான அரசாங்கமாக மோடியின் அரசு உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்