கல்வியை விட மாணவர்களுக்கு அன்பை வழங்குவது முக்கியம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு

டெல்லியில் தேசிய ஆசிரியர்கள் விருது 2023-க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார்.

Update: 2023-09-05 12:58 GMT

புதுடெல்லி,

நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ந்தேதி அன்று ஆசிரியர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டெல்லியில் நடப்பு ஆண்டிற்கான தேசிய ஆசிரியர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார்.

இதன்பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு விழாவில் கூட்டத்தினரிடையே பேசும்போது, ஆசிரியர்கள் பாராட்டும்போதோ, ஊக்குவிக்கும்போதோ அல்லது தண்டிக்கும்போதோ ஒவ்வொரு விசயம் பற்றியும் மாணவர்கள் நினைவில் வைக்கின்றனர்.

அவர்கள் மேம்பட வேண்டும் என்று தண்டிக்கப்படும்போது, மாணவர்கள் சரியான நேரத்தில் அதனை உணர்கிறார்கள். மாணவர்களுக்கு கல்வி கொடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதனை விட அன்பை வழங்குவது முக்கியம் என நான் நம்புகிறேன்.

நம்முடைய கல்வி கொள்கையானது, இந்திய கலாசாரம் மற்றும் பெருமையை இணைப்பதில் முன்னுரிமை அளிக்கிறது என்று பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியோரிடம் இருந்தும், ஆரியபட்டா முதல் சந்திரயான்-3 வரையும், விரிவான அறிவை நம்முடைய ஆசிரியர்களும், மாணவர்களும் பெற வேண்டும். அவர்களிடம் இருந்து உந்துதலை பெற்று பரந்த மனதுடன் நாட்டின் வளமிக்க வருங்காலத்திற்காக பணியாற்ற வேண்டும்.

நம்முடைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, கடமைக்கான காலத்தில் ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கு இந்தியாவை விரைவாக முன்னெடுத்து செல்வார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் என்று பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்