இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு

இமாசல பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-16 03:26 GMT

சிம்லா,

மேகவெடிப்பு காரணமாக இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பெய்த கனமழை காரணமாக இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்-மந்திரி தெரிவித்துள்ளார். இமாசல பிரதேசம் சிம்லாவில் அடுத்து அடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களை மீட்பு படையினர் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும் டேராடூன், பவுரி, தெக்ரி, நைனிடால் மற்றும் உதம் சிங் நகர் போன்ற பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய புனித தலங்களுக்கு செல்லும் சாலை நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளன. இதனால் ஆன்மீக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மற்றும் இமாசல பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக கங்கை. யமுனை போன்ற ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகின்றது. இமாசல பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்