மனித குல வளர்ச்சி தான் அனைத்து மதங்களின் நோக்கம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

மனித குல வளர்ச்சி தான் அனைத்து மதங்களின் நோக்கம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

Update: 2022-10-08 18:45 GMT

பெங்களூரு:

மனித நேயத்தை நோக்கி...

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் ராஷ்டிரிய பசவ பிரதிஷ்டன அமைப்பின் சார்பில் சர்வதர்ம தன்சத்-2022 என்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

நாட்டில் மாற்றங்களை கொண்டு வர சம வாய்ப்புகளை வழங்க வேண்டும். வாய்ப்புகள் ஒடுக்கப்பட்டு, மறுக்கப்பட்டால் தலைமுறை பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியாது. எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததில் நான் பாக்கியம் செய்ததாக உணர்கிறேன். நமது முயற்சிகள் அனைத்தும் மனித நேயத்தை நோக்கியே இருக்க வேண்டும்.

நமக்கு மதம் தெரியாது

நம் நாட்டிற்கு ஒரு கலாசாரம் தேவை. எந்த ஒரு நாட்டின் மதிப்பும் குடிமகனின் கலாசாரம், பாரம்பரியம், வரலாற்றை பொறுத்தே அமையும். 12-ம் நூற்றாண்டில் பசவண்ணர் அனைவருக்கும் சம வாய்ப்பு, மரியாதை, பணி அர்ப்பணிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி பிரசாரங்கள் செய்தார்.

மதத்தில் மட்டுமின்றி பாலினத்திலும் சமத்துவத்தை கொண்டு வர வேண்டும். அறிவுக்கு ஜாதியோ, மதமோ கிடையாது. நாம் பிறக்கும் போது நமக்கு மதம் தெரியாது. உலகத்தை விட்டு பிரியும் போதும் மதம் இல்லை. ஆனால் நாம் உயிருடன் இருக்கும் போது மதம், சாதி ஆகியவற்றை தான் பின்பற்றி வருகிறோம். மனித குல வளர்ச்சி தான் அனைத்து மதங்களின் நோக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் வீட்டுவசதிதுறை மந்திரி வி.சோமண்ணா, ராஜூ கவுடா எம்.எல்.ஏ., ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்