குடகில் 3,800 தங்கும் விடுதிகள் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது; அப்பச்சு ரஞ்சன் எம்.எல்.ஏ தகவல்

குடகு மாவட்டத்தில் 5 ஆயிரம் தங்கும் விடுதிகள் உள்ளன. அவற்றில் 3,800 தங்கும் விடுதிகள் சட்டவிரோதமாக இயங்கி வருவதாக அப்பச்சு ரஞ்சன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-28 19:00 GMT

குடகு;

சுற்றுலா தினம்

குடகு மாவட்ட பஞ்சாயத்து மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா மறு ஆய்வு என்ற தலைப்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சதீஷ், மற்றும் அப்பச்சு ரஞ்சன் எம்.எல்.ஏ ஆகியோர் தலைமை வகித்தனர். அப்போது பேசிய அப்பச்சு ரஞ்சன் எம்.எல்.ஏ கூறியதாவது:-

குடகு மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று வேகம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்தது. தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு முழு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தங்கும் விடுதிகள்

சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்றபடி குடகு மாவட்டத்தை மீண்டும் சீரமைத்து வருகிறோம். குடகு மாவட்டத்தில் 5 ஆயிரத்திக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. அதில் 1,200 தங்கும் விடுதிகள் முறையான அனுமதி பெற்று இயங்கி வருகிறது. மீதமுள்ள 3,800 தங்கும் விடுதிகள் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடவேண்டும். இல்லையென்றால் சுற்றுலாத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


'ஞான காவேரி'

இதை தொடர்ந்து பேசிய கலெக்டர் பி.சி.சதீஷ் கூறியதாவது:-

குடகு மாவட்டம் இயற்கையாகவே அழகு நிறைந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை எந்நேரமும் இருக்கும். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடக பட்ஜெட்டில் குடகு மாவட்டத்திற்கு என தனிப் பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அந்த பல்கலைக்கழகத்திற்கு 'ஞான காவேரி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்வதன் மூலம் குடகு மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்