குஜராத்: ஜாம்நகர் வந்தடைந்த மெஸ்சி; ஆனந்த் அம்பானி வரவேற்கிறார்

வந்தாரா வனவாழ் மீட்பு மற்றும் பாதுகாப்பு மையத்திற்கு செல்ல மெஸ்சி திட்டமிட்டு உள்ளார்.;

Update:2025-12-15 23:49 IST

ஜாம்நகர்,

அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 13-ந்தேதி இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில், கையில் உலக கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட மெஸ்சியின் உருவ சிலையை மெஸ்சி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

மெஸ்சியின் வருகையையொட்டி அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான டிக்கெட்டுகள் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்பட்டன. இதில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், நடிகர் ஷாருக்கான் உள்பட பிரபலங்கள் பங்கேற்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.

எனினும், இந்நிகழ்ச்சியில் மெஸ்சியை சந்திக்க முடியாமல் போன ஆத்திரத்தில் ரசிகர்கள் பலர் நாற்காலிகளை தூக்கி வீசி, வன்முறையில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அடுத்தடுத்த சுற்றுப்பயண நிகழ்வில் மெஸ்சி ஈடுபட்டார்.

கொல்கத்தா, ஐதராபாத், மும்பை பயணங்கள் வெற்றியுடன் முடிந்த நிலையில், அவர் டெல்லி சென்றார். டெல்லியில் முதல்-மந்திரி ரேகா குப்தா, ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா, இந்திய முன்னாள் கால்பந்து கேப்டன் பாய்சங் பூட்டியா மற்றும் முக்கிய நபர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

இதன்பின்னர் மெஸ்சியுடன், நட்சத்திர கால்பந்து வீரர்களான லூயிஸ் சுவாரெஜ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் குஜராத்தின் ஜாம்நகருக்கு இரவில் வந்தடைந்தனர். அவர், வந்தாரா வனவாழ் மீட்பு மற்றும் பாதுகாப்பு மையத்திற்கு செல்ல திட்டமிட்டு உள்ளார். அவரை அந்த மையத்தின் நிறுவனர் மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநரான ஆனந்த் அம்பானி வரவேற்கிறார். மெஸ்சி வந்தாராவில் இன்றிரவு தங்குகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்