பிரதமர் மோடி ஜனவரியில் தமிழகம் வருகை

பிரதமர் மோடியின் தமிழக பயணத்திற்கான தேதியை இறுதி செய்வது குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.;

Update:2025-12-16 05:30 IST

புதுடெல்லி,

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த சூழலில், கூட்டணியை பலப்படுத்தி ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. சார்பில் வியூகங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. பொதுவாக தேர்தலுக்கு முன்பு குறைந்தது 3 முறை பிரதமர் வந்து விடுவார். அதன்படி வருகிற ஜனவரி மாதத்தில் அவரது முதல் பயணம் தொடங்க இருக்கிறது.

ராமேசுவரத்தில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா, விவசாயிகளை சந்திக்கும் நிகழ்ச்சி, தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு விழா ஆகிய இந்த 3 நிகழ்ச்சிகளுக்கும் பிரதமரை எதிர்நோக்குகிறார்கள்.

இதில் ராமேசுவரம் காசி தமிழ் சங்கம விழாவை இந்த மாத இறுதியில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. தற்போது பிரதமரின் வருகைக்காக அது தள்ளிப்போகும் என தெரிகிறது. இந்த விழா நடைபெறும் நேரத்தில் மற்ற 2 நிகழ்ச்சிகளையும் நடத்தலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

அப்படி நடத்தினால் 3 நிகழ்ச்சிகளிலும் பிரதமர் ஒரு சேர கலந்து கொள்வார். இல்லாத பட்சத்தில் யாத்திரை நிறைவு விழாவுக்கு உள்துறை மந்திரி அமித்ஷாவை கலந்து கொள்ள செய்துவிட்டு, மற்ற 2 விழாக்களையும் பிரதமருக்காக ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கலாம் எனவும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

இதனால்தான் தேதியை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் ஓரிரு நாட்களில் தேதி முடிவாகி விடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்