சுனிதா வில்லியம்ஸ் போன்று விண்வெளிக்கு செல்ல விருப்பம்... நாசாவுக்கு தேர்வான மாணவி பேட்டி
நாசாவுக்கு 5 நாட்கள் செல்லும் அவர், செயற்கைக்கோள் ஏவுதல் உள்ளிட்ட விசயங்களை பற்றி கற்று கொள்ள இருக்கிறார்.;
ஆமதாபாத்,
குஜராத்தின் ஆமதாபாத் நகரை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி மஹி ஹேமங் குமார் பட் (வயது 14). லோட்டஸ் ஆங்கில வழி பள்ளியில் படித்து வருகிறார். மஹி, அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் ஸ்டெம் நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதன்படி, நாசாவுக்கு 5 நாட்கள் செல்லும் அவர், செயற்கைக்கோள் ஏவுதல் உள்ளிட்ட விசயங்களை பற்றி கற்று கொள்ள இருக்கிறார்.
இவரை நாசா தேர்ந்தெடுத்தது பற்றி மஹி அளித்த பேட்டியில், நான் இஸ்ரோவின் ஐ.ஐ.ஆர்.எஸ். நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். நாசாவின் ஸ்டெம் நிகழ்ச்சி, ஐரோப்பிய விண்வெளி கழகம், ஆஸ்திரேலிய விண்வெளி கழகம், ஐக்கிய அரபு அமீரக விண்வெளி கழகம், யுனெஸ்கோ, யூ.என்.ஓ. மற்றும் யுனிசெப் ஆகியவற்றின் உறுப்பினர்களில் ஒருவராக நான் உள்ளேன்.
சுனிதா வில்லியம்ஸ், சுபான்ஷு சுக்லா மற்றும் கல்பனா சாவ்லா ஆகியோர் எனக்கு முன்மாதிரிகளாக உள்ளனர். சுனிதா வில்லியம்ஸ் போன்று நான் விண்வெளிக்கு செல்ல விரும்புகிறேன் என கூறினார்.
இவருடைய தந்தை ஹேமங் குமார் பட் ஆசிரியராக உள்ளார். சிறு வயதில் இருந்து மஹிக்கு வானியல் தொடர்பாக ஆர்வம் அதிகரித்து இருந்தது. இதனால், அதுதொடர்பான புத்தகங்களை அவருக்கு வாங்கி கொடுத்து ஊக்குவித்து இருக்கிறார். இதன்படி, இஸ்ரோ ஐ.ஐ.ஆர்.எஸ். நிகழ்ச்சிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதன் தொடர்ச்சியாக, நாசாவின் ஆன்லைன் தேர்விலும் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றார்.