ராகுல் காந்தி குறித்து சோனியாவிடம் புகார் அளித்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம்

ராகுல் குறித்து சோனியா காந்தியிடம் புகார் அளித்த ஒடிசா முன்னாள் எம்.எல்.ஏ. காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.;

Update:2025-12-15 19:42 IST

புவனேசுவரம், -

ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் வலிமை இழந்து வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தேசிய தலைவருமான சோனியா காந்திக்கு, ஒடிசாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் நிர்வாகியுமான முகமது மொகிம் என்பவர் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி ஆகியோர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். கட்சியின் தலைமைக்கும், அடிமட்ட தொண்டர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவேளை இருப்பதாகவும், 83 வயதான கார்கேவால் இளைய சமுதாயத்தினருடன் இணைந்து செயல்பட முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதன் காரணமாகவே, ஜோதிராதித்ய சிந்தியா, ஹிமாந்த பிஸ்வா சர்மா போன்ற இளம் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகவும், தொடர்ச்சியான தவறான முடிவுகள், மோசமான தலைமையும், பொறுப்பான பதவிகளை தகுதியற்றவர்களுக்கு வழங்கியதுதான் காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விக்கு காரணம் என்று வெளிப்படையாக குற்றம்சாட்டி இருந்தார்.மேலும் பொதுவெளியில், தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் தலைமை குறித்து விமர்சித்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முகமது மொகிம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்