சாதிவாரி கணக்கெடுப்புக்கு 'இந்தியா' கூட்டணி ஆதரவு - சஞ்சய் ராவத்

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ‘இந்தியா' கூட்டணி ஆதரவு அளிப்பதாக சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

Update: 2023-10-08 22:45 GMT

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு

பீகாா் மாநில அரசு சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தியது. சமீபத்தில் பீகார் அரசு கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டது. அதில் அந்த மாநிலத்தில் 84 சதவீதம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து சாதிவாரி கணக்கெடுப்புக்கு பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்தநிலையில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு 'இந்தியா' கூட்டணி ஆதரவாக இருப்பதாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்து உள்ளது. ராஜஸ்தானிலும் அது நடக்கும். மராட்டியத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் கட்டாயம். சமூகத்தின் அனைத்து தரப்பினரும், 'இந்தியா' கூட்டணியும் அதற்கு ஆதரவாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா பிராந்திய கட்சியாக மாறும்

இதேபோல பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா பிராந்திய கட்சிகளை விமர்சித்து வருவது குறித்து அவர் கூறுகையில், "தேசிய ஜனநாயக கூட்டணி உருவானது எப்படி?. எல்லா கட்சிகளும் பிராந்திய கட்சிகள் தான். பா.ஜனதாவும் பிராந்திய கட்சியாக மாறும். 12 மாநிலங்களில் பா.ஜனதா இல்லை. 2024-ல் பிராந்திய கட்சிகளின் பலத்தால் தான் நாட்டின் அரசியல் நடைபெறும்.

பிராந்திய கட்சிகளின் உதவியுடன் தான் வாஜ்பாய் அரசு அமைந்தது என்பதை ஜே.பி. நட்டா மறந்துவிட கூடாது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்