காங்கிரசின் 4-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் போட்டி
காங்கிரஸ் கட்சி 4-வது கட்டமாக 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிடுகிறார்.;
பெங்களூரு:
4-வது கட்ட பட்டியல்
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சி தனது வேட்பாளர்கள் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. பா.ஜனதா 3 கட்டமாக 222 தொகுதிகளுக்கும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 2 கட்டமாக 143 தொகுதிகளுக்கு ேவட்பாளர்களை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி 3 கட்டங்களாக 209 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் நேற்று இரவு 4-வது கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ெஜகதீஷ் ஷெட்டர்
சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டருக்கு உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், சிக்கமகளூரு தொகுதியில் தம்மய்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சி.டி.ரவியுடன் நெருக்கமாக இருந்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். அவருக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை எதிர்த்து முகமது யூசுப் சவனூர் போட்டியிடுகிறார்.
இந்த 7 பேரையும் சேர்த்து காங்கிரஸ் கட்சி 216 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இன்னும் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. முக்கியமாக பெங்களூரு புலிகேசிநகர், சி.வி.ராமன்நகர் தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், காங்கிரஸ் 8 தொகுதிகளுக்கும், பா.ஜனதா 2 தொகுதிகளுக்கும், ஜனதாதளம்(எஸ்) 84 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டி உள்ளது.
வேட்பாளர் விவரம்
காங்கிரஸ் 4-வது கட்டமாக 7 தொகுதிகளுக்கு ெவளியிட்டுள்ள வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:-
1. லிங்கசுகூர் (எஸ்.சி.) - துர்கப்பா எஸ்.ஹூலகேரி, 2. உப்பள்ளி-தார்வார் மத்தி - ஜெகதீஷ் ஷெட்டர், உப்பள்ளி-தார்வார் மேற்கு - தீபக் சின்சோர், 3. சிக்காவி - முகமது யூசுப் சவனூர், 4. ஹரிஹர் - நந்தகவி சீனிவாஸ், 5. சிக்கமகளூரு - தம்மைய்யா, 7. சரவணபெலகொலா - கோபாலசுவாமி.