கேரளாவில் ஊழியர்களை திடீரென பணிநீக்கம் செய்த பைஜூஸ் நிறுவனம் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்: தொழிலாளர் நலத்துறை மந்திரி

ஒரேநாளில் 173 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2022-10-27 11:19 IST

திருவனந்தபுரம்,

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் டெக்னோ பார்க் வளாகத்தில் நூற்றுக்கணக்கான மென்பொருள் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

அங்கிருக்கும் பைஜூஸ் நிறுவனத்தின் கிளையில் இருந்து ஒரேநாளில் 173 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் வேலையை இழந்த ஊழியர்கள் கேரள கல்வி மற்றும் தொழிலாளர் துறை மந்திரி வி சிவன்குட்டியை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளனர். பணியாளர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருவனந்தபுரத்தில் இருந்து தனது செயல்பாடுகளை நிறுத்த பைஜூஸ் திட்டமிட்டுள்ளது என்று டெக்னோபார்க்கில் உள்ள ஐடி ஊழியர்களின் நல அமைப்பான 'பிரதித்வானி' தெரிவித்துள்ளது.

பைஜூஸ் நிறுவனம் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.232 கோடி நஷ்டம் அடைந்தது. கடந்த 2021-ம் ஆண்டு ரூ.4588 கோடியாக உயர்ந்துள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இதே காரணத்தைக் கூறி பைஜூஸ் திருவனந்தபுரம் கிளையில் பணிசெய்த 173 ஊழியர்களை ஒரேநாளில் பணி நீக்கம் செய்தது.

இதில் எவ்விதமான தொழிலாளர் சட்டத்தையும் பின்பற்றவில்லை என பைஜூஸ் நிறுவன ஊழியர்கள் தொழிலாளர் நலத்துறை மந்திரி சிவன்குட்டியை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட அவர், கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

இதுகுறித்து மந்திரி வி சிவன்குட்டி கூறுகையில், கேரள அரசு இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்