சபரிமலை: மகர விளக்கு தினத்தில் 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது.;

Update:2025-12-28 03:30 IST

கோப்புப்படம்

சபரிமலை,

சபரிமலையில் இந்தாண்டுக்கான மண்டல பூஜைகளுக்காக சபரிமலை நடை நவ.16-ம் தேதி திறக்கப்பட்டது. நவ.17-ம் தேதி அதிகாலை முதல் மண்டல பூஜை தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அரவணை விற்பனையிலும் பல மடங்கு உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நடப்பாண்டு சீசன் தொடக்கத்தில் அதிகப்படியான பக்தர்கள் வருகையால் கேரள ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆன்லைன் மற்றும் நேரடி பதிவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நேற்று (சனிக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இத்துடன் 41 நாட்கள் நீடித்த மண்டல பூஜை யாத்திரை நிறைவு பெற்றது. இதனைத்தொடர்ந்து மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் மகர விளக்கையொட்டி அடுத்தமாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை ஏற்கனவே தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்து விட்டது. 11-ந் தேதி முதல் 19-ந் தேதி வரையிலான தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. மகர விளக்கு பூஜைக்கு முந்தைய நாளான 13-ந் தேதி 35 ஆயிரம் பக்தர்கள், மகரவிளக்கு தினமான 14-ந் தேதி 30 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்